

இஸ்தான்புல்,
மரியுபோல் நகரம் மீது ரஷியா தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உக்ரைனின் மூத்த பேச்சுவார்த்தையாளரும் அதிபரின் ஆலோசகருமான மைக்கைலோ பொடோலியாக் கூறுகையில், ரஷியப் படைகள் மரியுபோல் மீது தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தி வருகிறது. உண்மையான ஈஸ்டர் போர் நிறுத்தத்தை ரஷியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருந்தார்.
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான அமைதி பேச்சுவார்த்தைக்கான அனைத்து உதவிகளையும் செய்ய துருக்கி தயாராக இருக்கிறது என்றும், உக்ரைனின் மரியுபோலில் காயமடைந்தவர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷிய ஆக்கிரமிப்பு துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து குடிமக்களை உடனடியாக வெளியேற்ற வேண்டியதன் அவசியம் பற்றி துருக்கி அதிபரிடம் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேட்டோ உறுப்பு நாடான துருக்கி, கருங்கடலில் உக்ரைன் மற்றும் ரஷியாவுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும், இரு நாடுகளுடனும் நல்ல உறவுகளை கொண்டுள்ளது. இந்த போரில் ரஷியா மீதான பொருளாதாரத் தடைகளை எதிர்க்கும் அதே சமயம், உக்ரைனுக்கும் துருக்கு ஆதரவளித்து வருவது குறிப்பிடத்தக்கது.