

ரோம்,
உக்ரைன் மீது ரஷியா இன்று 18-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. மேலும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறவும், மனிதாபிமான உதவிகள் வழங்கவும் ரஷியா சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால், பெரும்பாலான பகுதிகளில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மக்கள் போர் பயத்தின் காரணமாக அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இதுவரை இத்தாலிக்கு சுமார் 35 ஆயிரம் மக்கள் அகதிகளாக சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஸ்லோவேனியாவுடனான வடகிழக்கு எல்லை வழியாக இத்தாலிக்குள் நுழைந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து 22 அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, அட்ரியாடிக் துறைமுக நகரமான பெஸ்காராவை நோக்கி சென்று கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 32 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார் மற்றும் அவரது குழந்தைகள் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல்துறை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஓய்வெடுத்தபின்னர் பயணத்தைத் தொடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.