நார்வே பிரதமருடன் அமைதி பேச்சுவார்த்தை பற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆலோசனை

உண்மையில் போரை நிறுத்த வேண்டிய தேவையை ரஷியா உணர வேண்டும் என ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.
கீவ்,
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி போர் மூண்டது. நேட்டோவில் சேரும் முடிவை உக்ரைன் கைவிட கோரியும், ராணுவ நடவடிக்கை என்ற பெயரிலும் ரஷியா போரில் ஈடுபட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன.
ரஷியாவுக்கு, நட்பு நாடான வடகொரியா, ராணுவ தளவாடங்கள் மற்றும் வீரர்களை அனுப்பி மறைமுக உதவி செய்கிறது என கூறப்படுகிறது. போரால் பெண்கள், குழந்தைகள் மற்றும் வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கில் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு அடைக்கலம் தேடி வேறு இடங்களுக்கு தப்பியோடி விட்டனர்.
இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா ஈடுபட்டு உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதேபோன்று, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில், நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் உடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தை பற்றி ஆலோசனை நடத்தினார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ராஜதந்திர முயற்சிகளை பற்றி அப்போது அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இந்த சந்திப்பு பற்றி ஜெலன்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவு செய்தியில், நார்வே பிரதமர் உடன் நான் பேசினேன். சமீப நாட்களாக மேற்கொண்டு வரும் ராஜதந்திர பணி பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எங்களுடைய குழுவானது, அமெரிக்க தரப்புடன் இணைந்து பணியாற்றுகிறது. நாங்கள் விரைவாக முன்னேறி வருகிறோம். ஐரோப்பிய பிரதிநிதிகளையும் நாங்கள் அழைத்திருக்கிறோம் என பதிவிட்டு உள்ளார்.
இது ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தையாக இருந்தது. உண்மையில் போரை நிறுத்த வேண்டிய தேவையை ரஷியா உணர வேண்டும். ரஷிய தரப்பில் அது அரசியல் விளையாட்டாக இருந்து விட கூடாது. அதனை வைத்தே போர் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.






