பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்- அன்டோனியோ குட்டரெஸ்

கனமழை, வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சென்றுள்ளார்.
Image Tweeted By @antonioguterres
Image Tweeted By @antonioguterres
Published on

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கனமழை, வெள்ளத்தால் நிலைகுலைந்துள்ள பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சென்றுள்ளார். அங்கு அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய வெள்ள மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்புடன் சென்று குட்டரெஸ் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குட்டெரெஸ் கூறுகையில், "இயற்கை கண்மூடித்தனமானது. காலநிலை மாற்றத்திற்கு பாகிஸ்தான் சிறிதளவே காரணம். ஆனால் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் மிகவும் வியத்தகு முறையில் பாதிக்கப்பட்ட ஹாட்ஸ்பாட்களில் பாகிஸ்தான் ஒன்றாகும்.

பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அளவில் நிதி உதவி தேவை. இதனால் அவர்களுக்கு உதவும்படி நான் சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறேன். மீட்பு மற்றும் புனரமைப்பு ஆகியவற்றை தாராளமாக அளிக்குமாறு உலக நாடுகளை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com