ஈரானில் அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஊழியர் சாவு; ஐ.நா. கண்டனம்

ஈரானில் அஜர்பைஜான் தூதரகத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அஜர்பைஜான் நாட்டின் தூதரகம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த தூதரகத்துக்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் தூதரகம் முன் நிறுத்தப்பட்டிருந்த ஊழியரின் கார் மீது மோதினார்.

தொடர்ந்து காரில் இருந்து துப்பாக்கியுடன் இறங்கிய அந்த மர்ம நபர் அதிரடியாக தூதரகத்துக்குள் நுழைந்தார். அப்போது தூதரகத்தின் தலைமை பாதுகாவலர் மற்றும் பிற பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.

அவர்களை அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் தலைமை பாதுகாவலர் உள்பட 3 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதில் தலைமை பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்த மற்ற பாதுகாவலர்கள் அந்த மர்ம நபரை மடக்கிப்பிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர். படுகாயம் அடைந்த 2 பாதுகாவலர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "தூதரக பணிக்கு எதிரான இந்த தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுதொடர்பாக விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஈரானில் அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com