நைஜீரியாவில் பொது மக்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே நடைபெறும் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. #UNCondemns
நைஜீரியாவில் பொது மக்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்
Published on

ஐக்கிய நாடுகள்,

நைஜீரியாவின் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமான போகோ ஹராம் கிளர்ச்சியாளர்களுக்கும், நைஜீரிய நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை நடந்து வருகிறது. இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 1 ஆம் தேதி நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியான மைடுகுரி பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்தினருக்குமிடையே தாக்குதல் சம்பவம் நடைபெற்றது.

இச்சம்பவத்தில் தப்ப முயன்ற பொது மக்கள் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் 90 க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை, அனைத்து தரப்பினர்களும் மோதல் சம்பவங்களை உடனடியாக நிறுத்தவும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நைஜீரிய நாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து ஐ நா சபையின் மனித ஒருங்கிணைப்பாளர் யாசின் கபே கூறுகையில்,

வடகிழக்கு நைஜீரியாவில் தொடர்ந்து நடைபெறும் நேரடியான மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்களினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதிகளில் கொடூரமான கொலைகள், குண்டு வெடிப்புகள் மேலும் பெண்களை கடத்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுதல் போன்ற குற்றங்கள் தினசரி நடைபெறுகின்றன. பொது மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், அவர்கள் அமைதியான சூழலில் வாழவும் அனைத்து தரப்பினர்களும் மோதல் சம்பவங்களை உடனடியாக நிறுத்த அழைப்பு விடுக்கிறேன் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com