மியான்மரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38- பேர் பலி: ஐநா கடும் கண்டனம்

மியான்மர் மக்கள் ராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
மியான்மரில் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38- பேர் பலி: ஐநா கடும் கண்டனம்
Published on

ஜெனீவா,

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்க மறுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் ராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.ஆனாலும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது.

இதனிடையே சீன அரசு மியான்மர் ராணுவத்துக்கு ஆதரவளிப்பதாக போராட்டக்காரர்கள் நம்புவதால், அவர்கள் மியான்மரில் உள்ள சீன தூதரகங்கள் மற்றும் சீன நிறுவனங்கள் முன்பு திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் மியான்மரின் மிகப்பெரிய நகரமான யாங்கூனில் நேற்று முன்தினம் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கு உள்ள சீன சொத்துக்களை சூறையாடினர்.

யாங்கூனில் உள்ள ஹலிங் தார் யார் மற்றும் ஸ்வேபிதா சீனாவுக்கு சொந்தமான 10 கட்டமைப்புகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆடை உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் பாதுகாப்பு கிடங்குகள் ஆகும். ஒரு சீன உணவகமும் தாக்குதலுக்கு உள்ளானது.தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகின்றன. பல சீன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர் மற்றும் மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளனர், என்று மியான்மரில் உள்ள சீன தூதரகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஹலிங் தார் யார், ஸ்வேபிதா நகரங்களில் கூடுதல் ராணுவம் குவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.அதேசமயம் போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு ராணுவ வீரர்களை தாக்கினர். இதையடுத்து ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல் மாண்டலே உட்பட மியான்மரின் மற்ற நகரங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர்.மேலும் நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 80-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், மியான்மர் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38- பேர் கொல்லப்பட்டதற்கு ஐநா பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐநா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

மியான்மரில் நடைபெற்று வரும் அமைதியான போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை ஐநா கடுமையாக கண்டிக்கிறது. மியான்மர் மக்களுக்கு சர்வதேச சமூகங்கள் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும். பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தற்போது வரை மியான்மரில் அமைதியாக போராடிய 138- பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com