ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க சீனா தடை

ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிப்பதற்கு சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. #MasoodAzhar #UNSecurityCouncil #China
ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்: சர்வதேச பயங்கரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க சீனா தடை
Published on

ஜெனீவா,

ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின் தலைவரான மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானில் உள்ள மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும், ஆயுதங்கள் வாங்குவதற்கு தடை விதிக்க வேண்டும், அவர் இயங்குவதற்கு அனுமதித்து வரும் பாகிஸ்தானுக்கு நெருக்குதல் கொடுக்க வேண்டும் என்று இந்தியா முயற்சி மேற்கொண்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஏற்கனவே மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என சீனா கூறி வருகிறது.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. ஏற்கனவே, இந்தியாவின் முயற்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வந்த சீனாவின் மீதே அனைவரது பார்வையும் இருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் மசூத் அசாரை சேர்ப்பது தொடர்பாக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகளும் இந்த பட்டியலில் மசூத் அசாரை சேர்த்துக்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்க தயாராக இருந்தபோதும், சீனா அவருக்கு தடைவிதிக்க மீண்டும் மறுப்பு தெரிவித்தது.

இதன் மூலம் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சிக்கு நான்காவது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com