ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்!

உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம்!
Published on

நியூயார்க்,

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைனும் அதன் அண்டை நாடான ரஷியாவும் நீண்ட காலமாகவே மோதல் போக்கில் உள்ளன. உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்க்கக்கூடாது என்கிற ரஷியாவின் கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நிராகரித்துவிட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்சமடைந்துள்ளது.

இப்போதைய நிலவரப்படி, உக்ரைனில் தாக்குதல் நடத்த ஏதுவாக ரஷிய போர் படைகள் பெருமளவில் உக்ரைன் எல்லை பகுதியில் குவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே, கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இதற்கு உடனடியான எந்தவிதமான பதிலையும் ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, இந்த வார தொடக்கத்தில் திடீர் அறிவிப்பாக, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் ஆகிய மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் நேற்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு காரணமாக பதற்றம் இன்னும் அதிகரித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளன.உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை "சுதந்திரமானவை" என்று அங்கீகரிக்கும் ரஷ்ய அதிபர் புதினின் முடிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

ரஷியாவின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை நடத்த அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன.இதனை தொடர்ந்து, உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. அதில் உலக நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தன.

இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், உக்ரைன் மீது போர் தொடுக்க நினைக்கும் ரஷியா மீது நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக இன்று கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com