

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், மாசசூசெட்ஸ், மேரிலாந்து, கனெக்டிகட், வர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்கள் பனிப்புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. நியூயார்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பனிப்புயல் தாக்கி வருவதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் காரணமாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர். பல மாகாணங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. வடகிழக்கு அமெரிக்காவில் 3½ லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடுமையான பனிப்பொழிவையும் தீவிரமான தாக்கங்களையும் ஏற்படுத்தும் இவ்வகை புயல்கள் தற்போது அடிக்கடி ஏற்படுகின்றன. ஆனால், நாட்டில் மக்கள் அடர்த்தியாக வாழும் ஒரு பகுதியை முழுவதுமாக இந்த அளவிலான தீவிரத்துடன் தாக்கிய பனிப்புயல் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படவில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், கடுமையான காற்றுடன் அதிக பனியை கொட்டும் புயலுக்கான ‘பிளிசார்டு’ எச்சரிக்கையை 9 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வானிலை மையம் விடுத்துள்ளது. பல பகுதிகளில் சாலைகள் தெரியாத அளவுக்கு 3 அடிக்கும் மேல் பனி குவிந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவுக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட முடியாமல் அவர்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.