ஈரானில் பரபரப்பு; மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியது

ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானில் பரபரப்பு; மிகப்பெரிய போர்க்கப்பல் தீப்பிடித்து, கடலில் மூழ்கியது
Published on

டெஹ்ரான்,

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு பக்க பலமாக இருக்கின்றன.

இந்த மோதல் காரணமாக ஓமன் மற்றும் பாரசீக வளைகுடா பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது.

குறிப்பாக உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் சர்வதேச நாடுகளின் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து மர்மமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறது.

இந்தநிலையில் ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஈரான் நாட்டின் மிகப்பெரிய போர்க்கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான கார்க்' என்கிற போர்க்கப்பல் ஹார்முஸ் ஜலசந்திக்கு மிக அருகில் உள்ள ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த கப்பலில் நேற்று அதிகாலை 2:25 மணியளவில் திடீரென தீ பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ கண்ணிமைக்கும் நேரத்தில் கப்பல் முழுவதிலும் பரவியது.

கப்பலில் இருந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் உயிர் காக்கும் ஆடைகளை அணிந்து கப்பலில் இருந்து கடலில் குதித்து உயிர் தப்பினர். இதனிடையே தீயில் முற்றிலுமாக உருக்குலைந்த கார்க்' போர் கப்பல் கடலில் அப்படியே மூழ்கியது.

கப்பலில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததையும் அதனால் வானுயரத்துக்கு கரும்புகை மண்டலம் எழுந்ததையும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன. கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்ன என்பதை ஈரான் கடற்படை உடனடியாக தெரிவிக்கவில்லை. எனவே இது எதேச்சையாக நடந்த விபத்தா ? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இங்கிலாந்தில் கட்டப்பட்டு 1977-ம் ஆண்டு ஈரானிடம் ஒப்படைக்கப்பட்ட கார்க்' கப்பல் 1979 இஸ்லாமியப் புரட்சியை தொடர்ந்து நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 1984-ல் ஈரான் கடற்படையில் சேர்க்கப்பட்டதும், இது ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல்களில் ஒன்றாக விளங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

கார்க்' கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது, ஈரான் கடற்படையில் சமீபத்தில் ஏற்பட்ட பேரழிவு ஆகும். முன்னதாக கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜாஸ் துறைமுகத்துக்கு அருகே நடந்த ராணுவ பயிற்சியின் போது போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகணை தவறுதலாக மற்றொரு போர்க்கப்பலை தாக்கியதில் 19 மாலுமிகள் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com