

ஹாங்காங்,
தொடர் போராட்டங்களால் ஹாங்காங்கில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இது ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாமுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் ஜனநாயக ஆதரவாளர்களின் போராட்டம் தொடங்கியதற்கு பிறகு, முதல் முறையாக நேற்று ஹாங்காங் நாடாளுமன்றம் கூடியது. இதில் நிர்வாக தலைவர் கேரி லாம் வருடாந்திர உரையாற்ற இருந்தார். ஆனால் சபை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேஜைகளின் மீது ஏறி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தொடர் அமளி காரணமாக கேரி லாம் வருடாந்திர உரையை நிகழ்த்த முடியாமல் போனது. இதையடுத்து அவர் சபையில் இருந்து வெளியேறினார். ஹாங்காங் வரலாற்றில் நிர்வாக தலைவர் ஒருவர் நாடாளுமன்றத்தில் வருடாந்திர உரையை நிகழத்த முடியாமல் வெளியேறியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த கேரி லாமின் பேச்சு வீடியோவாக நாடாளுமன்றத்தில் ஒளிபரப்பட்டது. இதில் அவர் ஒரே நாடு இரண்டு நிர்வாகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியிருந்தார்.