ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு: இலங்கை அமைச்சர் ராஜினாமா

இலங்கை பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் இருந்து மனுஷா நாணயக்கார விலகியுள்ளார்.
ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு: இலங்கை அமைச்சர் ராஜினாமா
Published on

கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த மாதம் அதிரடியாக நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். அதிபரின் இந்த நடவடிக்கையை ஏற்காத விக்ரமசிங்கே, தானே பிரதமராக தொடர்வதாகவும், தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை கூட்டுமாறும் அதிபரை கேட்டுக்கொண்டார்.

இந்த பலப்பரீட்சையை தவிர்ப்பதற்காக நாடாளுமன்றத்தை வருகிற 16-ந்தேதி வரை அதிபர் முடக்கிவைத்தார். இதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் ரனில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நடவடிக்கைகளால் இலங்கை அரசியலில் திடீர் குழப்பம் ஏற்பட்டது. அங்கு நாடாளுமன்றத்தை கூட்டி வாக்கெடுப்பு நடத்தி இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற நாடுகள் இலங்கையை வலியுறுத்தின. மேலும் ஐ.நா. பொதுச்செயலாளரும் சிறிசேனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை கூட்டுவது தொடர்பாக சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுடன் அதிபர் சிறிசேனா ஆலோசனை நடத்தினார். அதன்படி 7-ந்தேதி (நாளை) நாடாளுமன்றத்தை கூட்ட அதிபர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. எனினும் அந்த செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சூழலில் வருகிற 14-ந்தேதி நாடாளுமன்றம் கூடும் என அதிபர் சிறிசேனா நேற்று முன்தினம் அறிவித்தார். இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது. அங்கு விக்ரமசிங்கே தலைமையிலான அணியை சேர்ந்த எம்.பி.க்களை இழுப்பதற்கு வசதியாகவே இந்த தாமத நடவடிக்கை என கூறப்படுகிறது. இலங்கை அதிபரின் இந்த நடவடிக்கைக்கு சபாநாயகர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜினாமா

தொடர்ந்து இலங்கை அரசியலில் குழப்பம் நீடித்து வரும், சமீபத்தில் பதவியேற்ற பிரதமர் ராஜபக்சே அமைச்சரவையில், தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக இருந்த மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில், ராஜபக்சே நியமனம், அரசியலமைப்புக்கு முரணானது

ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதற்கு துணை போக்கூடாது என்பதால், ராஜினாமா முடிவுக்கு வந்தாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ரனில் விக்ரமசிங்கேவையே சட்டப்பூர்வ பிரதமராக ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதர் சந்திப்பு

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூர்யாவை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் அலைனா பி.டெப்லிட்ஸ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்றம் விரைவாக கூட்ட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அரசியல் நெருக்கடியை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தை பற்றியும் ஆலோசனை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com