

வாஷிங்டன்,
லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். மேலும், கடல் வழியாக போதைப்பொருள் கடத்தி வரும் கும்பல் மீது தாக்குதல் நடத்தவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதாக சந்தேகிக்கப்படும் கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. இந்நிலையில் கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகு மீது நேற்று அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், ‘போதைப்பொருள் பயங்கரவாதிகள்’ மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க ராணுவம் இதுவரை நடத்திய 70 படகு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 235 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று நடத்த தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ள தகவலில், கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருளை கடத்தி வந்த படகு மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த படகில் போதைப்பொருள் ஏற்றிச் செல்லப்பட்டதற்கான ஆதாரம் எதையும் அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.