அமெரிக்காவின் நிபந்தனைகள் நியாயமற்றது- ஈரான் குற்றச்சாட்டு

ஈரான் -அமெரிக்கா இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அமெரிக்காவின் நிபந்தனைகள் நியாயமற்றது- ஈரான் குற்றச்சாட்டு
Published on

ஈரான் வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-

பேச்சுவார்த்தைகளில் ஈரானின் 10 நிபந்தனைகள் குறித்தும், அமெரிக்காவின் நிபந்தனைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இதில் மூன்று விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்காவுடன் ஆன பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் முடிவடைந்தன.

சில விஷயங்கள் தொடர்பாக நாங்கள் ஒரு புரிந்துணர்வை எட்டியுள்ளோம். அளவுக்கு அதிகமான கோரிக்கைகள் மற்றும் சட்டவிரோத வேண்டுகோள்களிலிருந்து அமெரிக்கா விலகி இருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறும்போது, ஒரே அமர்வில் ஒரு உடன்பாட்டை எட்டுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்திருக்கக் கூடாது. யாருக்கும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருக்கவில்லை என்றார்.

அதேபோல் ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி கூறியதாவது:-

ஈரானிய மக்களின் தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்காக, ஈரான் தூதுக்குழு 21 மணி நேரம் தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அமெரிக்க தரப்பின் நியாயமற்ற கோரிக்கைகள் காரணமாக பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது என்று தெரிவித்தது. ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறும்போது, நியாயமான ஒப்பந்தம் என்று ஈரான் கருதுவதற்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளும் வரை, ஹோர்முஸ் ஜலசந்தியின் சூழ்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது. போரில் தங்களால் பெற முடியாத சலுகைகளை பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா கோரியது என்று தெரிவித்தது.

இதற்கிடையே பேச்சுவார்த்தைகளில் ஈரான் நியாயமான முன்மொழிவுகளை தெரிவித்தது. தற்போது பிரச்சினைகளை யதார்த்தமாகப் பார்க்கும் பொறுப்பு அமெரிக்காவின் கையில் உள்ளது என்றும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு இதுவரை எந்த காலக்கெடுவோ அல்லது இடமோ நிர்ணயிக்கப்படவில்லை என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com