

அமெரிக்காவில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், பெருக்கவும் 1.2 டிரில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்வதற்கான மசோதா (சுமார் ரூ.75 லட்சம் கோடி) நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் (கீழ்சபை) நிலுவையில் இருந்து வந்தது.
இந்த மசோதா, பல மாத உள் விவாதங்கள் மற்றும் ஜனநாயக கட்சி எம்.பி.க்களிடையே லேசான பிளவுக்கு மத்தியில் பிரதிநிதிகள் சபையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 228 பேரும், எதிராக 206 பேரும் ஓட்டு போட்டனர். ஆளும் ஜனநாயக கட்சியின் 6 எம்.பி.க்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டு போட்டாலும், எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சியின் எம்.பி.க்கள் 13 பேர் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். மசோதாவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான எம்.பி.க்கள் ஓட்டு போட்டதால் மசோதா வெற்றிகரமாக நிறைவேறி விட்டது.
இந்த மசோதாவானது நாடாளுமன்ற செனட் சபையில் (மேல்சபை) கடந்த ஆகஸ்டு மாதமே நிறைவேறி விட்டது. தற்போது இரு சபைகளிலும் மசோதா நிறைவேறி ஜனாதிபதி ஜோ பைடனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, உள்நாட்டில் ஜோ பைடனின் செயல்திட்டங்களில் மிக முக்கிய இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியதை அறிந்து சபாநாயகர் நான்சி பெலோசியை ஜனாதிபதி ஜோ பைடன் நள்ளிரவில் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். இந்த மசோதா நிறைவேறுவதில் பக்க பலமாக இருந்ததற்கான ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சபாநாயகர் நான்சி பெலோசி நன்றி தெரிவித்துக்கொண்டார். உள்கட்டமைப்பு மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் அவர், இன்றிரவு (நேற்று முன்தினம் இரவு) ஒரு தேசமாக நாம் ஒரு மகத்தான படி முன்னோக்கி வைத்துள்ளோம். இப்போது இருந்து வரும் தலைமுறைகள், மக்கள் திரும்பிப்பார்ப்பார்கள். 21-ம் நூற்றாண்டுக்கான பொருளாதார போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற்றதும் இதைத்தான் அவர்கள் நினைப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.