இந்தியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா;10 சதவீதம் கூடுதல் வரி

கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை தடுத்து நிறுத்த அந்தந்த நாடுகள் முறையான சட்டங்களை இயற்றத் தவறியதே இதற்கு முக்கியக் காரணமாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
இந்தியாவுக்கு மீண்டும் அதிர்ச்சி  கொடுத்த அமெரிக்கா;10 சதவீதம் கூடுதல் வரி
Published on

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கட்டாயத் தொழிலாளர் முறையில் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியை போதுமான அளவில் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட அமெரிக்காவின் குறைந்தது 60 வர்த்தகக் கூட்டாளி நாடுகள் மீது புதிய சுங்க வரியை அறிவித்துள்ளார். இதன்படி, சம்பந்தப்பட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் முதல் 12.5 சதவீதம் வரை கூடுதல் சுங்கவரி விதிக்கப்படும். அமெரிக்கர்கள் வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களைச் சார்ந்திருப்பதை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இயற்கை எரிவாயு

வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவின்படி, கட்டாயத் தொழிலாளர் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யும் சட்டம் இல்லாத சீனா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 12.5 சதவீதம் சுங்கவரி விதிக்கப்படும்.அதே நேரத்தில், அத்தகைய சட்டங்களை ஏற்கனவே கொண்டிருந்தாலும் அவற்றை முழுமையாக அமல்படுத்தத் தவறியதாகக் கருதப்படும் இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளுக்கு 10 சதவீதம் சுங்கவரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனினும், அமெரிக்கா–மெக்சிகோ–கனடா வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் வரும் பொருட்கள் மற்றும் எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற சில முக்கிய இறக்குமதிப் பொருட்களுக்கு இந்த புதிய சுங்கவரி பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமலுக்கு வந்த புதிய உத்தரவு

இந்த புதிய சுங்கவரி உத்தரவு வெள்ளிக்கிழமை அதிகாலை 12.01 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க உச்ச நீதிமன்றம், 2025 ஏப்ரலில் டிரம்ப் அறிவித்திருந்த "விடுதலை நாள்" சுங்கவரி நடவடிக்கைகளை ரத்து செய்ததைத் தொடர்ந்து, இடைக்காலமாக விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத இறக்குமதி வரி வெள்ளிக்கிழமையுடன் காலாவதியானது. அதற்குப் பதிலாகவே இந்த புதிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் கூறுகையில், "அமெரிக்காவில் கட்டாயத் தொழிலாளர் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிரான தடைச் சட்டம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நடைமுறையில் உள்ளது. இதை அமெரிக்கா கடுமையாக அமல்படுத்தி வருகிறது. இதேபோல் மற்ற வர்த்தக நாடுகளும் செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.மேலும், "இன்றைய நடவடிக்கை மனித உரிமை மீறல்களையும், சர்வதேச வர்த்தகத்தில் நிலவும் சமநிலையற்ற போட்டியையும் சரிசெய்யும் முயற்சியாகும். இதன் மூலம் உலகத் தொழிலாளர்களின் நலனும் மேம்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு 10% சுங்கவரி தொடரும்

புதிய அறிவிப்பின்படி, இந்தியா மீது அமல்படுத்தப்படும் மொத்த சுங்கவரி 10 சதவீதமாகவே தொடரும்.முன்னதாக, கட்டாயத் தொழிலாளர் தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்ற காரணத்தால், இந்தியாவுக்கு கூடுதலாக 12.5 சதவீத அபராத சுங்கவரி விதிக்கப்படும் என டிரம்ப் நிர்வாகம் எச்சரித்திருந்தது.ஆனால், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் கட்டாயத் தொழிலாளர் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாலும், அதுதொடர்பான உறுதிமொழிகளை வழங்கியதாலும், இந்தியாவுக்கு 10 சதவீத சுங்கவரி மட்டுமே விதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தனது இறுதி உத்தரவில் தெரிவித்துள்ளது.இந்தியாவுடன் சேர்த்து கம்போடியா, குவாத்தமாலா, ஹோண்டுராஸ், இலங்கை, டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுமஇந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் புதிய சுங்கவரி நடவடிக்கைகள் விரைவில்

இதற்கிடையில், அமெரிக்க நிறுவனங்களுக்கு போட்டியாக உலக சந்தையில் மிகக் குறைந்த விலையில் பொருட்களை குவிக்கும் வகையில் உற்பத்திக்கு மானியம் வழங்கும் நாடுகள் மீது மேலும் ஒரு புதிய சுங்கவரி தொகுப்பை டிரம்ப் நிர்வாகம் விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்த முந்தைய சுங்கவரி நடவடிக்கைகளுக்குப் பதிலாக, சட்ட ரீதியாக வலுவான புதிய வர்த்தக நடவடிக்கைகளை கொண்டு வருவதில் டிரம்ப் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com