அமெரிக்கா: 2 முறை விஷ ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த மரண தண்டனை கைதி... குழப்பத்தில் அதிகாரிகள்

விஷ ஊசிகள் தோல்வியடைந்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கா: 2 முறை விஷ ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த மரண தண்டனை கைதி... குழப்பத்தில் அதிகாரிகள்
Published on: 

வாஷிங்டன்,

மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதிக்கு 2 விஷ ஊசிகள் செலுத்தியும் அவரது உயிர் பிரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, 2026-ல் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து மரண தண்டனை உத்தரவுகளையும் நிறுத்தி வைக்க டென்னசி மாகாண கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடந்த 1995-ம் ஆண்டு, குற்றச்செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் 19 வயதான கொலீன் ஸ்லெம்மர் மற்றும் 18 வயதான கிறிஸ்டா பைக் ஆகிய 2 பெண்களும் பயிற்சியாளர்களாக வேலை செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து கிறிஸ்டா பைக், தனது காதலனான 17 வயது டடாரில் ஷிப் என்பவருடன் இணைந்து, கொலீன் ஸ்லெம்மரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் அந்த சமயத்தில் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை செய்யப்பட்ட கொலீன் ஸ்லெம்மரின் மார்பில், சாத்தான் வழிபாடு தொடர்புடைய குறியீடுகள் செதுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின.

மரண தண்டனை

இந்த கொலை வழக்கு தொடர்பாக கிறிஸ்டா பைக் மற்றும் அவரது காதலன் டடாரில் ஷிப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதே சமயம், அவரது காதலன் டடாரில் ஷிப் 18 வயதுக்கு குறைவான மைனராக இருந்ததால், இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு

இதைத் தொடர்ந்து கிறிஸ்டா பைக் தரப்பில் பல்வேறு மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. கிறிஸ்டா பைக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அவரது குழந்தைப் பருவத்தில் ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல், மனநல பாதிப்புகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, கிறிஸ்டாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர். தற்போது 50 வயதாகும் கிறிஸ்டா, தனது இளம் பருவத்தில் நிகழ்ந்த இந்த கொலைக்காக மனம் வருந்துவதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இத்தகைய காரணங்களால் கொலையை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், கிறிஸ்டா பைக்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தனர். கிறிஸ்டாவுக்கு விஷ ஊசி செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

விஷ ஊசிகள்

இதன்படி, செப்டம்பர் 30-ந்தேதி(நேற்று) நாஷ்வில் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் கிறிஸ்டாவுக்கான மரண தண்டனையை நிறைவேற்றும் பணி தொடங்கியது. அவரது உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பின், அவரது உடல் நிலையில் எந்த குறைபாடும் ஏற்படாததால், 2-வது விஷ ஊசி செலுத்தபப்ட்டது. இரண்டு விஷ ஊசிகள் செலுத்தப்பட்ட பிறகும், கிறிஸ்டாவின் உயிர் பிரியவில்லை. அவரது இதயத் துடிப்பு நிற்கவில்லை.

இதையடுத்து கிறிஸ்டாவின் வழக்கறிஞர்கள் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் எனக்கோரி அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர். தொடர்ந்து கோர்ட்டு உத்தரவுப்படி, கிறிஸ்டா பைக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்டாவுக்கு விஷ ஊசி செலுத்தும்போது, ஊசி போடுவதற்கான நரம்பை கண்டுபிடிக்க மருத்துவ உதவியாளர்கள் திணறியதாகவும், 2 விஷ ஊசிகளும் தோல்வியடைந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் கிறிஸ்டாவின் வழக்கறிஞர்கள் தெரிவிவித்துள்ளனர்.

அதிகாரிகள் குழப்பம்

இதனிடையே, விஷ ஊசி தோல்வியடைந்தது ஏன்? என அதிகாரிகள் குழப்படைந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால் டென்னசி மாகாணத்தில் கடந்த 200 ஆண்டுகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் பெண்ணாக கிறிஸ்டா இருந்திருப்பார்.

இந்நிலையில், அவரது மரண தண்டனை நிறைவேற்றம் தோல்வி அடைந்ததால், 2026-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட இருந்த அனைத்து மரண தண்டனை உத்தரவுகளையும் நிறுத்தி வைக்க டென்னசி மாகாண கவர்னர் பில் லீ உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com