வலுக்கும் மோதல்களுக்கு மத்தியில் சீனா செல்கிறார் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்

அமெரிக்கா சீனா இடையே மோதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
வலுக்கும் மோதல்களுக்கு மத்தியில் சீனா செல்கிறார் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்
Published on

வாஷிங்டன்,

சீனாவின் கொள்கைகள், தென்சீனக்கடல் விவகாரம், தைவானுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வது ஆகிய விவகாரங்களால் சீனா- அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையில், இருநாடுகளும் இறக்குமதி பொருட்களுக்கு வரியை அதிகரித்து மறைமுக வர்த்தக மோதலிலும் ஈடுபட்டு உள்ளன.

இதனால், சீனா அமெரிக்கா இடையேயான உறவில் இலேசாக கசப்புணர்வு நீடித்து வரும் நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸ், இந்த வாரத்தில் சீனாவுக்கு பயணம் செய்கிறார். அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை உயர் பொறுப்புக்கு வந்த பிறகு, ஜேம்ஸ் மேட்டீஸ் சீனா செல்வது இதுதான் முதல் தடவையாகும். 26 முதல் 28 ஆகிய மூன்று நாட்கள் சீனாவில் இருக்கும் ஜேம்ஸ் மேட்டீஸ் சீனாவின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வது குறித்து தனது கவலையை சீனா வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.

சீன பயணத்தை முடித்துக்கொண்டு தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஜேம்ஸ் மேட்டீஸ் பயணம் மேற்கொள்கிறார். தென்கொரிய பயணத்தின்போது, தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு மந்திரி சாங் யோங் மூ -வை சந்தித்து பேசுகிறார். இதன்பிறகு, ஜப்பான் செல்லும் ஜேம்ஸ் மேட்டீஸ், அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி சுனோரி ஒனோடராவை சந்தித்து பேசுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com