அமெரிக்காவின் 2 அதி நவீன போர்க்கப்பல்கள் ரோந்து தென் சீனக் கடலில் பதற்றம்

தென் சீனக் கடலில் அமெரிக்காவின் 2 அதி நவீன போர்க்கப்பல்கள் புதிதாக ரோந்து பணியில் இணைந்துள்ளது. இதற்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் 2 அதி நவீன போர்க்கப்பல்கள் ரோந்து தென் சீனக் கடலில் பதற்றம்
Published on

தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் காரணமாக சீனாவுக்கும் வியட்நாம், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கியுள்ள சீன ராணுவம் அங்கு விமானப் படை தளத்தையும் அமைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படும் அமெரிக்கா, தென் சீனக் கடல் சர்வதேச எல்லைக்கு உட்பட்டது என்று வாதிட்டு வருகிறது. மேலும் அந்த கடல் பகுதியில் கடந்த 2015 முதல் அமெரிக்க கப்பல்கள் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் புதிதாக 2 போர்க்கப்பல்களைத் தென் சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்க கடற் படை அனுப்பியுள்ளது. யு.எஸ்.எஸ்.கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட யுஎஸ்எஸ் வெய்னி இ-மேயர் என்ற போர்க்கப்பல் ரோந்து பணியில் இணைந்துள்ளன.

சீன ராணுவம் உருவாக்கியுள்ள செயற்கை தீவுகளுக்கு அருகில் சுமார் 12 கடல் மைல் தொலைவில் அமெரிக்க போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடும் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச கடல் எல்லையை சீனா மதிக்கிறது. அதே நேரம் சீன எல்லைக்குள் யாரும் நுழைய முயன்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து தென் சீன கடல் வழியிலேயே இடம்பெறுகின்றது. மட்டுமின்றி மிக நீண்ட காலமாக தென் சீனா கடற்பகுதியில் உள்ள நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் தென் சீன கடல் பகுதியில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

எனினும், தென்சீனக்கடலில் உரிமை கோரி பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் சீனாவுடன் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பல முறை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த கண்டனத்திற்கு சீனா கடந்த 15ஆம் தேதி கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா தனது அதி நவீன விமானம் தங்கி போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்ல தூண்டிவிடும் நடவடிக்கை எனவும் சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

குறித்த ரோந்து நடவடிக்கையில் யு.எஸ்.எஸ் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல், யு.எஸ்.எஸ் Wayne E. Meyer நாசகார கப்பல், F/A-18 jet fighters விமானம் உள்ளிட்டவைகள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த திடீர் ரோந்து நடவடிக்கையின் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியிருப்பதாக அரசில நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com