தொடரும் பதற்றம்.. சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க தூதுரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தொடரும் பதற்றம்.. சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்
Published on

சவுதி அரேபியா,

டெஹ்ரான் மட்டுமின்றி ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். தங்கள் உச்சபட்ச தலைவரை பறிகொடுத்ததால் ஆவேசத்துடன் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலை நோக்கி அலையலையாக ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி வருகிறது.

மறுபுறம் அமீரகம், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் நீண்டதூர ஏவுகணைகள், டிரோன்களை வீசி ஈரான் கலங்கடித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

உலகையே உலுக்கி வரும் இந்த போர் இன்று 4-வது நாளாக எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்ந்து வருகிறது. இருதரப்பும் நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களுடன் தங்கள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்தவகையில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க தூதுரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு டிரோன்கள் மூலம் நடந்த தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்ததுடன், கடுமையாக சேதமடைந்துள்ளதாக சவுதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள தங்களது ராணுவத் தளங்களுக்கு தேவையின்றி யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க தூதுரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com