அமெரிக்க அரசு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது - வெள்ளை மாளிகை தகவல்

அமெரிக்க அரசு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது - வெள்ளை மாளிகை தகவல்
Published on

வாஷிங்டன்,

உலகம் முழுவதும் சர்வதேச விமான போக்குவரத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி இருந்தது. அதன் பிறகு பல கட்டுப்பாடுகளுடன் தற்போது சர்வதேச அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் சில நாடுகளில் சர்வதேச பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு, அவர்கள் தடுப்பூசி போட்டுகொண்ட விவரங்கள் அடங்கிய தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் இந்த திட்டத்தை மே மாதம் முதல் செயல்படுத்த இருப்பதாக போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அரசு தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்காது என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி தெரிவித்துள்ளார். பொது மக்களின் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உரிமைகளை பாதுகாப்பதில் அமெரிக்க அரசு கவனம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ஓவ்வொருவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அரசிடம் தனிநபர் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் தடுப்பூசி விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே அமெரிக்காவில் சர்வதேச பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் இல்லை என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com