மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை அமெரிக்கா அதிரடி

மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.
மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை அமெரிக்கா அதிரடி
Published on

வாஷிங்டன்,

மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதை வல்லரசு நாடான அமெரிக்கா கடுமையாக கண்டித்தது. அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

மியான்மர் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். ஆனால் அங்கு ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டதை அந்த நாட்டின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேங் நியாயப்படுத்தினார். இந்த நிலையில் மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது அமெரிக்கா அதிரடியாக பொருளாதார தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையொட்டி வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசியபோது, மியான்மரில் நடந்த சதித்திட்டத்தின் மீதான விளைவுகளை சுமத்த தொடங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அறிவிக்கிறேன். அமெரிக்காவில் மியான்மர் அரசாங்க நிதியில் இருந்து 1 பில்லியன் டாலர்களை எடுப்பதற்கான முறையற்ற அணுகல்களை தடுக்க அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. மியான்மரில் ஆட்சி கவிழ்ப்பில் தொடர்புடைய ராணுவ தலைவர்கள், அவர்களது வணிக நலன்கள், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மீது பொருளாதார தடை விதிக்கும் நிர்வாக உத்தரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன் என கூறினார். இந்த நடவடிக்கைக்கு முதல் கட்டமாக இலக்கு ஆகிறவர்கள் இந்த வாரம் அடையாளம் காணப்படுவார்கள். மியான்மர் அரசு சொத்துகளை முடக்குகிறோம் எனவும் அவர் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com