

வாஷிங்டன் டி.சி.
அமெரிக்காவின் முக்கிய பகுதியில் ரசாயன வெடிகுண்டு தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழி தாக்குதல் நடத்தின. இதில், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது. பல மாதங்களாக நீடித்து வந்த இந்த மோதலில் இருதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஈரானுக்கு எதிரான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தியது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
எனினும், இரு நாடுகளுக்கு இடையே முறையான அமைதி உடன்பாடு ஏற்படாத சூழலில், அவ்வப்போது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் ஜனாதிபதி டிரம்ப்பின் அரசில் முக்கிய பதவிகளை வகிக்க கூடியவர்களை இலக்காக கொண்டு, ரசாயன வெடிகுண்டு தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு உள்ளது. இதனை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
ஈரானால் டர்ட்டி பாம் என அழைக்கப்படும் இந்த ரசாயன வெடிகுண்டை வெடிக்க செய்ய உண்மையில் ஈரானிடம் அதற்கேற்ற ஆட்கள் உள்ளனரா? என்பது விவாதத்திற்குரிய விசயங்களில் ஒன்றாக உள்ளது என்றும் உளவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி சி.என்.என். வெளியிட்ட செய்தியில், அமெரிக்க நாட்டின் உள்ளே வெடிகுண்டு உற்பத்திக்கான மூலப்பொருட்களை மறைத்து வைத்திருக்கிறோம் என்று ஈரானியர் ஒருவர் பேசிய தகவல்களை அமெரிக்க உளவு துறை இடைமறித்து கேட்டுள்ளது.
இந்த உளவு தகவல் தொடர்பாக உளவுப்பிரிவு அதிகாரிகள் தனித்தனியாக, நம்பகத்தன்மை பற்றி உறுதி செய்யும் பணியில் இறங்கியுள்ளனர். எனினும், அணுசக்தி அல்லது ரசாயன பொருட்களை கொண்டு, அமெரிக்காவில் வெடிகுண்டு தாக்குதலை ஈரான் நடத்துவதற்கு சாத்தியம் உள்ளது என்று அவர்களில் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
பயங்கரவாதம் தொடர்பான அந்த ஆயுதம் எந்த வடிவிலும் இருக்கலாம். தற்கொலை வெடிகுண்டு தாக்குதலாக கூட அது இருக்கக்கூடும். இதனால், பொதுமக்களை உண்மையில் நோய்வாய்ப்பட்டவர்களாகவும், சில இடங்களை வாழத்தகாத இடங்களாகவும் கூட அவர்கள் மாற்றக்கூடும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
இந்த சூழலிலேயே, வளைகுடா பகுதியில் உள்ள பஹ்ரைன் நாடு மீது ஈரான் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மார்கோ ரூபியோ கண்டனம் தெரிவித்ததுடன், பஹ்ரைன் வெளியுறவு துறை மந்திரி அப்துல் லத்தீப்பை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையும் நடத்தினார். அப்போது, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கான அமெரிக்காவின் ஆதரவையும் வெளிப்படுத்தினார்.