வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்: தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் அறிவிப்பு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கூறி வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. அவரது கைது தொடர்பாக தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
வெனிசூலா அதிபரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்: தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.112 கோடி சன்மானம் அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

எண்ணெய் வளமிக்க லத்தீன் அமெரிக்க நாடான வெனிசூலாவில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான ஆட்சியில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

இதன் காரணமாக, 2015-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஐக்கிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது.

எனினும், நாடாளுமன்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தை தர மறுத்த மதுரோ, அதைவிட அதிக அதிகாரம் படைத்த அரசியல் சாசன பேரவையை 2017-ம் ஆண்டு அமைத்து ஆட்சி செலுத்தி வந்தார்.

இதனிடேயே வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் ஊழல் மற்றும் சர்வாதிகார ஆட்சி புரிவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டியது.

அதோடு அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது.

இதற்கிடையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலில், மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நிகழ்ந்த ஆர்ப்பாட்டங்களில் பலர் உயிரிழந்தனர்.

அதனை தொடர்ந்து, வெனிசூலா நாடாளுமன்ற தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை தாமே அறிவித்துக் கொண்டார். அவர் அவ்வாறு அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரை வெனிசூலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது.

இதனை வன்மையாக கண்டித்த நிக்கோலஸ் மதுரோ, நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்துக்கு அமெரிக்காவே காரணம் என குற்றம் சாட்டினார். மேலும் வெனிசூலாவின் வளங்களை கொள்ளையடிக்கவே அமெரிக்கா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் வெனிசூலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா அவரை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய, தகவல் அளிப்பவர்களுக்கு 15 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.112 கோடியே 68 லட்சம்) பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதிபர் நிக்கோலஸ் மதுரோவை தவிர்த்து வெனிசூலாவின் ராணுவ மந்திரி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 13 மூத்த அதிகாரிகளும் போதைப்பொருள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களையும் கைது செய்ய அமெரிக்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசூலா மக்களின் தேவைகளுக்கு சேவை செய்யும் ஒரு வெளிப்படையான, பொறுப்பான, பிரதிநிதித்துவ அரசாங்கத்திற்கு தகுதியானவர்கள் இவர்கள் இல்லை. மாறாக சட்டவிரோத போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் இவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிக்கோலஸ் மதுரோ உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் போதைப்பொருள் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல், பணமோசடி மற்றும் ஊழல் ஆகியவை அடங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com