இந்தியா மீது 25 சதவீத கூடுதல் வரி நாளை அமல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது அமெரிக்கா

டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப். இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை கடந்த ஏப்ரல் மாதம் விதித்தார். பின்னர் வரி விதிப்பை நிறுத்தி வைத்து பல நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியாவுடன் 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்தபோதிலும் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் அபராதமாக இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீத வரி விதிப்பதாகவும் டிரம்ப் அறிவித்தார். ரஷியாவுடன் வர்த்தகம் செய்வதால் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.இதன்மூலம் இந்தியா மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதில் முதலில் அறிவிக்கப்பட்ட 25 சதவீத வரி அமலுக்கு வந்துவிட்டது. ரஷியாவுடனான வர்த்தகம் காரணமாக அபராதமாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரி நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் முன்னேற்றம் ஏற்பட்டு இந்தியா மீதான வரி விதிப்பு நிறுத்தப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது.இந்தநிலையில் இந்தியா மீது அபராதமாக விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரி நாளை அமலுக்கு வருவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரஷிய கூட்டமைப்பு அரசாங்கத்தால் அமெரிக்காவிற்கு விற்கப்படும் அச்சுறுதல்களுக்கு பதில் அளிக்கும் விதமாக புதிய வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்தியா மீது வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய இறக்குமதிகள் மீது அபராதமாக விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரிகள் ஆகஸ்டு 27-ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வரும். இது ஆகஸ்டு 6-ம் தேதி கையொப்பமிட்ட ஜனாதிபதி டிரம்பின் உத்தரவால் வரிகள் உயர்த்துவதை உறுதிப்படுத்தி உள்ளது. டிரம்ப் கூறியிருந்த காலக்கெடுவான 27-ம் தேதிக்கு பின்னர் கிடங்குகளில் இருக்கும் அனைத்து பொருள்களுக்கும் கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்கிறது.
இதற்கிடையே அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தவறினால் மற்றும் ரஷியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படலாம் என்றும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால் வரும் வாரங்களில் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு இந்தியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த வரி விதிப்பு நியாயமற்றது என்று இந்தியா தெரிவித்தது. நாட்டின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்தது.






