

வாஷிங்டன்,
அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டரைச் சுட்டு வீழ்த்தியதற்கு ஈரான் தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, ஈரானின் கெஷ்ம் தீவு, சிரிக், ஜாஸ்க் மற்றும் பந்தர் அப்பாஸ் ஆகிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதை அவர் உறுதிபடுத்தி இருந்தார்.
இதுதொடர்பாக டொனால்டு டிரம்ப தனது பதிவில், “நேற்று இரவு ஹார்முஸ் ஜலசந்தி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நமது அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களில் ஒன்றை ஈரானியர்கள் சுட்டு வீழ்த்தியதாக நமது ராணுவம் எனக்கு தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இருப்பினும், அமெரிக்கா இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து டிரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கப் படைகள் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கப்படை மத்திய தலைமையகம் அறிவித்துள்ளது. இது குறித்த அதன் பதிவில், “நேற்று அமெரிக்க ராணுவத்தின் அப்பாச்சி ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பதிலடியாக, ஜனாதிபதி டிரம்பின் வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க படை ஈரானுக்கு எதிராகத் தற்காப்பு தாக்குதல்களைத் தொடங்கின. ஈரானின் ஆக்கிரமிப்புக்கு இது ஒரு தகுந்த பதிலடியாகும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஈரான் படைகளால் வேண்டுமென்றே குறிவைக்கப்படவில்லை என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தியதற்கு ஈரான் பொறுப்பல்ல என்றும், ஹார்முஸ் ஜலசந்தியில் தற்போது நிலவும் சூழலில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடும். எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.