ஈரான் மீது அமெரிக்கா கடும் தாக்குதல்: மத்திய கிழக்கில் பதற்றம்

நேற்று முன் தினம் முன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.
அமெரிக்கா
ஏஐ படம்
Published on

வாஷிங்டன்,

ஈரானின் அணு ஆயுத திட்டங்களை முன்வைத்து அந்தநாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த பிப்ரவரி 28-ந்தேதி திடீர் தாக்குதல் நடத்தின.இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரும் உயிரிழந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடுத்தது. அத்துடன் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் படைத்தளங்களை குறிவைத்தும் தாக்கியது.மறுபுறம் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும். இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையேயும் பயங்கர தாக்குதல்கள் நடந்தன.

ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த இந்த போர் ஈரான் மற்றும் லெபனா னில் ஆயிரக்கணக்கானோரின் உயிரை பறித்தது. அது மட்டுமின்றி வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் பாதித்தது.இடையில் ஹார்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியதால் கச்சா எண் ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் போக்குவரத்து முடங்கி இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிப்பை சந்தித்தன.மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து சர்வதேச நாடுகளில் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

சுமார் 40 நாட்கள் தீவிர தாக்குதலுக்குப்பின் இருதரப்பும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தன. பின்னர் பெரும் முட்டுக்கட்டைகளுக்குப்பின் கடந்த மாதம் 17-ந்தேதி ஈரான்-அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதையடுத்து அங்கு பதற்றம் சற்று தணிந்து ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து சுமூகமாக நடைபெற்றது.ஆனால், நேற்று முன் தினம் முன்று கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா, போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார். டிரம்ப் அறிவித்தபடியே ஈரான் மீது கடுமையான தாக்குதலை அமெரிக்கா தொடுத்துள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய ராணுவ கட்டளை அமைப்பு கூறியிருப்பதாவது:

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் ராணுவ திறனை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், டொனால்டு டிரம்பின் உத்தரவின் பேரில் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. அமெரிக்கா மீண்டும் தாக்கினால் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படும் என்று ஈரான் கூறியிருந்ததால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு பதற்றம் அதிகரித்து வருவதால், சர்வதேச நாடுகள் உன்னிப்பாக நிலைமையை கவனித்து வருகின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com