

வாஷிங்டன்,
அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் சமீபத்தில் கையெழுத்திட்டன. இதற்கான இறுதி ஒப்பந்தத்துக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடந்தது. இதில் இரு நாடுகளின் குழுவும் பங்கேற்றன. ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படுவதாக ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே ஹோர்முஸ் ஜலசந்தியில் தங்களது அமைதியின்றி செல்ல முயன்றதாகக் கூறி வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அந்தக் கப்பல்களை நோக்கி பல டிரோன்கள் ஏவப்பட்டன.
அந்த டிரோன்களை அமெரிக்க கடற்படை இடைமறித்தது. ஆனால் ஒரு டிரோன், சிங்கப்பூர் கப்பல் மீது மோதி வெடித்தது. இதில் அந்தக் கப்பல் சிறிது சேதம் அடைந்தது. இத்தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் ஈரானின் ஏவுகணை, டிரோன் தளங்கள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தியது. இதை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக அமெரிக்க ராணுவம் கூறும்போது, போர்நிறுத்தத்தை ஈரான் வெளிப்படையாக மீறி வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நியாயமற்ற ஆக்கிரமிப்புக்குப் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈரானின் ஆபத்தான செயல்பாடுகள் கப்பல் போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதிக்கின்றன. ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான பயணத்திற்கான ஆதரவை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து வழங்கும் என்று தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது, ஈரானின் டிரோன் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்குமா என்று நிருபர்கள் கேட்டபோது, அதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள் என்று அவர் கூறிய சிறிது நேரத்திலேயே ஈரான் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறும்போது, ஈரான் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. நாங்கள் அதை மதித்துச் செயல்பட்டு வருகிறோம். அந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் விதம் குறித்து அவர்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம். ஆனால் வன்முறைக்கு வன்முறை மூலமே பதிலடி கொடுக்கப்படும் என்றார்.
இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் எங்கு நடந்தது என்பது குறித்து தகவல் வெளியானது. தெற்கு ஈரானில் சிரிக் துறைமுகம் மீது அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஆனால் சிரிக் துறைமுகம் மீதான அமெரிக்கத் தாக்குதலால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும், அங்கு நிலைமை இயல்பாக உள்ளது என்றும் ஈரான் தெரிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடி நடவடிக்கையில் ஈரான் இறங்கியது. வளைகுடா பகுதி முழுவதும் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்தது. மேலும் ஆக்கிரமிப்பு மீண்டும் நடந்தால், எங்களின் பதிலடி இதைவிடக் கடுமையாக இருக்கும் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்ததாகச் செய்தி வெளியிட்டது. இதற்கிடையே ஈரான் உச்சத் தலைவரின் ராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெசாய் கூறும்போது, நாங்கள் களத்தில் புதிய திறன்களைப் பயன்படுத்த உள்ளோம். இம்முறை பரவலான உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும் என்பதை டிரம்ப் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் கட்ட மோதலை விட, இரண்டாவது கட்ட மோதல் அமெரிக்காவிற்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தும் என்றார்.
அதேபோல் ஈரான் பாராளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரான இப்ராஹிம் அசிசி கூறும்போது, பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் அமெரிக்கா மீண்டும் ஒரு முறை ஈரானைத் தாக்கி உள்ளது. பேச்சுவார்த்தைக்கான கொள்கைகளையோ அல்லது போர்நிறுத்தத்தையோ கடைப்பிடிக்காதவர் என்பதைத் தோல்வியடைந்த அமெரிக்க அதிபர் வெளிப்படுத்தியுள்ளார். போர்நிறுத்தத்தை மீறும் இந்த பொறுப்பற்ற செயல், எப்போதும் போலவே, அவர்கள் தரப்பில் பின்வாங்கலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தும். பரஸ்பரம் குற்றம் சாட்டும் போக்கு இனி பலனளிக்காது என்றார். அமெரிக்கா-ஈரான் மீண்டும் பரஸ்பர மோதலில் ஈடுபட்டதால் அமைதி பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.