அமெரிக்கா: போராட்டத்தின்போது பெண் செய்தியாளர் மீது போலீஸ் துப்பாக்கி சூடு


அமெரிக்கா: போராட்டத்தின்போது பெண் செய்தியாளர் மீது போலீஸ் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 9 Jun 2025 8:57 PM IST (Updated: 10 Jun 2025 1:38 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரர் செய்தியாளர் லாரனை குறிவைத்து சுட்ட சம்பவம் வீடியோவில் பதிவாகி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு-அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடிக்கும் அவர், சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஜனாதிபதி டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.

இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது.

இந்த கலவரத்தை கட்டுப்படுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் நடந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் புல்லட் துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பயனபடுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் போராட்டம் குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் செய்தியாளர் லாரன் டோமாசி சென்றிருந்தார். அங்கு கலவரம் நடைபெறும் பகுதிக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து கேமரா முன்பு செய்தியாளர் லாரன் விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ்காரர் ஒருவர் ரப்பர் புல்லட் துப்பாக்கியால் லாரனை குறிவைத்து சுட்டார். இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் லாரனின் காலில் ரப்பர் புல்லட் பாய்ந்தது. அவர் வலியால் அலறியபடி அங்கிருந்து விலகிச் சென்றார். அதோடு தனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அவர் கூறுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் அருகில் நின்ற ஒருவர் போலீஸ்காரரை நோக்கி, "நீங்கள் ஒரு செய்தியாளரை சுட்டுவிட்டீர்கள்" என்று கூறுகிறார்.

இந்த சம்பவம் குறித்து லாரன் பணிபுரிந்து வரும் தனியார் செய்தி நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், "லாரனும், அவருடன் சென்ற கேமராமேனும் தற்போது நலமாக உள்ளனர். அவர்கள் தங்கள் பணியை தொடர்ந்து செய்து வருவார்கள். போராட்டங்களின்போது முன்களத்தில் நின்று பணியாற்றும் செய்தியாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துகளை இந்த சம்பவம் தெளிவாக நினைவூட்டுகிறது. முக்கிய தகவல்களை வழங்குவதில் செய்தியாளர்களின் பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இது உணர்த்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story