இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து

இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.
இந்திய சுதந்திர தினத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து
Published on

வாஷிங்டன்,

இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமுடன் கொண்டாடப்படுகிறது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு சுதந்திர தினம் முதல் ஓராண்டுக்கு அதனை நாடு முழுவதும் கொண்டாடுவது என மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, ஹர்கர் திரங்கா எனப்படும் வீடுதோறும் மூவர்ண கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல விசயங்கள் முன்னெடுத்து செல்லப்பட்டன. இதேபோன்று சமூக ஊடக முகப்பு பக்கத்தில் தேசிய கொடி இடம் பெற செய்யும்படி பிரதமர் மோடி மக்களை கேட்டு கொண்டார்.

உலகம் முழுவதும் உள்ள இந்திய மக்கள் இன்று நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், ஏறக்குறைய 40 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள், ஆகஸ்டு 15-ந்தேதி அன்று 75-வது ஆண்டு விடுதலை கொண்டாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மகாத்மா காந்தியின் உண்மை மற்றும் அகிம்சை ஆகியவற்றின் உறுதியான செய்தியை வழிகாட்டியாக கொண்ட ஜனநாயக பயணத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்காவும் இணைகிறது என தெரிவித்து உள்ளார்.

இந்திய அமெரிக்க சமூகத்தினர், அமெரிக்காவை அதிக புதுமையான, எல்லாவற்றையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான ஒரு நாடாக உருவாக்கி உள்ளனர் என கூறியதுடன், இந்த ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் 75-வது ஆண்டு தூதரக உறவு கொண்டாட்டங்களிலும் ஈடுபடுகிறது என தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com