

மத்திய கிழக்கில் 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அமெரிக்கா - ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், தற்போது வரை எந்த பலனும் இதற்கு கிட்டவில்லை. ஈரான் - அமெரிக்கா மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியிலும் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த வழியாகவே நடப்பதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால் பொருளாதார நெருக்கடியை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. வளரும் மற்றும் ஏழ்மை நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கச்சா எண்ணெய் விநியோக பாதிப்பால் அமெரிக்காவிலும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. போரை நிறுத்துவதற்காக மறைமுக பேச்சுவார்த்தை இருநாடுகளும் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
எனினும், இரு நாடுகளும் தங்கள் நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பிறகு கச்சா எண்னெய் உடனடியாக சரியும் என்றும் டிரம்ப் கூறினார்.