

வாஷிங்டன் டி.சி.,
உலகின் மிக பெரிய பொருளாதார நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அடுத்த இடத்தில் சீனா உள்ளது. எனினும், வர்த்தக ரீதியாக இந்த இரு நாடுகளும் அடிக்கடி பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகிற ஏப்ரல் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார். இந்த பயணத்தின்போது, சீன அதிபர் ஜின்பிங்கை நேரில் சந்தித்து பேச இருக்கிறார்.
இதுபற்றி என்.பி.சி. நியூஸ் செய்தி ஊடகத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியின்போது, ஏப்ரல் மாதம் நான் சீனாவுக்கு செல்வேன். இதேபோன்று, ஜின்பிங் வருட இறுதியில் அமெரிக்காவுக்கு வருவார் என கூறினார். எனினும், எந்த தேதியில் செல்வார் போன்ற பயண விவரங்கள் வெளியிடப்படவில்லை.
அவருடைய பயணம் பற்றி தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், உலகில் இரு பெரும் சக்தி வாய்ந்த நாடுகளாக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்கு இடையே நல்ல நட்புறவு உள்ளது. உங்களுக்கே தெரியும். அவருடன் நான் நட்புடன் செயல்பட்டு வருகிறேன். அவருடன் நல்ல முறையில் என்னுடன் பேசி வருகிறார் என கூறினார்.
கடந்த 4-ந்தேதி டிரம்ப் மற்றும் ஜின்பிங்ங இருவரும் ஒன்றரை மணிநேரம் வரை தொலைபேசி வழியே பேசினர். இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், முழுவதும் வர்த்தகம் சார்ந்த பேச்சுகளில் கவனம் செலுத்தப்பட்டது என்றார். ஆனால், ஈரான், உக்ரைன் போன்ற அரசியல் விவகாரங்களை பற்றி அவர் குறிப்பிடவில்லை. இரு நாடுகளுக்கும் இந்த பேச்சுவார்த்தை நல்ல பலனுள்ள ஒன்றாக முடிந்தது என கூறினார்.
டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சீனாவுக்கு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.