

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு மற்றும் விசா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான விதிகளில் கடுமையான மாற்றங்களை அமெரிக்க அரசு முன்மொழிந்துள்ளது.
நர்சுகள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் உயர் திறன் கொண்ட பணியிடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கே முதல் முன்னுரிமை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக 'பெர்ம்' எனப்படும் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் நடைமுறையில் அமெரிக்க தொழிலாளர் துறை பெரிய அளவிலான சீர்திருத்தங்களைக் கொண்டு வருகிறது.
புதிய விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட வெளிநாட்டு ஊழியர்களின் தகுதிக்கு ஏற்ப வேலை வாய்ப்பு நிபந்தனைகளை வடிவமைக்க நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மேலும், வழக்கமான ஆட்சேர்ப்பு நடைமுறைகளைப் போலவே, செய்தித்தாள் விளம்பரங்களுக்குப் பதிலாக நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், வேலைவாய்ப்புத் தளங்கள், சமூக ஊடகங்கள், வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் கல்லூரி வளாக நேர்காணல்கள் மூலமே ஆட்சேர்ப்பு நடத்த வேண்டும்.
குறிப்பாக, பணியிடங்களுக்கான விளம்பரக் காலம் தற்போதைய 30 நாட்களில் இருந்து 90 நாட்களாக (3 மடங்கு) நீட்டிக்கப்படுகிறது. அந்த விளம்பரங்களில் ஊதிய விவரத்தையும் வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும். தகுதியான அமெரிக்கர்களைப் பணியமர்த்த உண்மையான முயற்சிகளை மேற்கொண்டதை நிறுவனங்கள் உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்றும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க தொழிலாளர் துறை மந்திரி கீத் சோண்டர்லிங் கூறுகையில், “அமெரிக்கத் தொழிலாளர்கள் உலகிலேயே சிறந்தவர்கள்; உயர் திறன் கொண்ட வேலைவாய்ப்பு களில் அவர்களுக்கே முதல் முன்னுரிமை கிடைக்க வேண்டும். தற்போதைய விதிகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் அமெரிக்கர்களை முழுமையாகப் பரிசீலிக் காமல் வெளிநாட்டினருக்கு விசா ஸ்பான்சர் செய்வதை இந்தப் புதிய விதி தடுக்கும்” என்றார்.
மேலும், நர்சுகள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு முதல் அட்டவணையின் (ஷெட்யூல் ஏ) கீழ் வழங்கப்பட்டிருந்த நிர்வாக விலக்குகள் நீக்கப்படுகின்றன. இதன் மூலம் இனி அவர்களைப் பணியமர்த்துவதற்கும் முழுமையான ஆட்சேர்ப்பு சோதனை கட்டாயமாக்கப்படுகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஊழியர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், கடந்த 2 ஆண்டுகளில் (முன்பு 6 மாதங்களாக இருந்தது) அமெரிக்க ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த நிறுவனங்கள், அதே போன்ற பணிகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்த விண்ணப்பிக்கத் தடை விதிக்கப்படுகிறது. அத்துடன், விண்ணப்பச் செயல்முறை முழுவதும் தகுதியான பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்துப் பரிசீலிக்க வேண்டும் என்றும் புதிய விதிகள் வலியுறுத்துகின்றன.
இந்தப் புதிய வரைவு விதிகள் வருகிற ஜனவரி 19-ந்தேதிவரை (60 நாட்கள்) பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளன. அதன் பிறகே இறுதி விதிகள் அமலுக்கு வரும். இது கிரீன் கார்டுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இந்திய ஐ.டி. ஊழியர்கள் மற்றும் நர்சு களுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.