மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு அமெரிக்கா தடை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக இலங்கை ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு அமெரிக்கா தடை
Published on

இலங்கையில் போர்க்குற்றம்

இலங்கையில் மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இறுதி போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டு, அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து பகுதிகளையும் இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

2009-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி விடுதலை புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்தது. இந்த போரில் லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் இந்த போரில் இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமெரிக்கா பொருளாதார தடை

இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. அதன்பேரில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறி இலங்கையை சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 12 நாடுகளை சேர்ந்த அதிகாரிகளின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி அமெரிக்கா நேற்று முன்தினம் இந்த தடைகளை அறிவித்தது.

அமெரிக்காவுக்குள் நுழைய தடை

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2008-2009 காலக்கட்டத்தில் இலங்கை திரிகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய கடற்படை அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீதிக்கு புறம்பாக நடந்த 8 தமிழர்களின் படுகொலையில் தொடர்புடைய ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கே ஆகிய இருவர் மீது தடைகள் விதிக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 ராணுவ அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்

முன்னதாக, 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கேவுக்கு இலங்கை கோர்ட்டு மரண தண்டனை விதித்ததும், எனினும் கடந்த ஆண்டு அந்த நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சுனில் ரத்நாயக்கேவை மன்னித்து அவரின் மரண தண்டனையை ரத்து செய்து, சிறையில் இருந்து விடுவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இலங்கையை போலவே அப்பாவி மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வங்காளதேசத்தின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் 6 பேர் மீதும், மியான்மர், சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com