

வாஷிங்டன்,
அமெரிக்கா-வடகொரியா பேச்சுவார்த்தை
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்த வடகொரியா மீது சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. குறிப்பாக கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றியாக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கும் அமெரிக்கா வடகொரியாவுக்கு எதிராக மிகவும் கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்தன.
அதே வேளையில் இந்த விவகாரத்தில் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்கா முன்வந்தது. அதன்பலனாக, உலகின் இருதுருவங்களாக அறியப்பட்ட வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினர்.
இந்த ஆண்டில் 9 ஏவுகணைகள் சோதனை
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் வடகொரியாவின் போக்கில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகள் முழுமையாக திரும்பப்பெறப்படாத வரை அணுஆயுதங்களை கை விட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால் பொருளாதார தடைகளை திரும்பப்பெறும் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்ததால் இருநாடுகள் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்தது. அதை தொடர்ந்து வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை சோதிக்கும் பாதைக்கு திரும்பியது. அந்த வகையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகளை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா சமீபகாலமாக குறுகிய மற்றும் நடுத்தர ஏவுகணைகளை தொடர்ச்சியாக சோதித்து வருகிறது. இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இதுவரை 9 ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
அதே வேளையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ஐசிபிஎம்) மற்றும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா மேற்கொள்ளவில்லை. அச்சோதனைகளை நடத்துவோம் என, வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் பலமுறை மறைமுகமாக கூறியபோதிலும் இதுவரை அவற்றை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ஐசிபிஎம்) முழு வீச்சில் செலுத்துவதற்கான சோதனையில் இறங்கியுள்ளதாகவும், கடைசியாக நடத்தப்பட்ட 2 சோதனைகள் அதற்கான முன்முயற்சிகள் எனவும் அமெரிக்கா பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவை தாக்கும் திறன்கொண்டது
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த ராணுவ அணிவகுப்பின் போது வடகொரியாவின் மிகப்பெரிய ஏவுகணையான ஹ்வாசோங்-17 ஏவுகணையை முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது.
சுமார் 15,000 கி.மீ. வரை பறக்கக்கூடிய இந்த ஏவுகணை அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் சென்று தாக்கும் திறன் கொண்டதாகும். மேலும் இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏவுகணையை சோதிப்பதற்கு வடகொரியா தயாராகி வருவதாகவும், கடந்த மாதம் 26-ந்தேதி மற்றும் கடந்த 4-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட 2 சோதனைகளும் இந்த ஏவுகணையை மதிப்பிடுவதற்கானவை எனவும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
வடகொரியா மீது பொருளாதார தடை
இந்த நிலையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ள வடகொரியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. வடகொரியாவின் ராணுவ திறன்களை மேம்படுத்துவதற்கு உதவக்கூடிய 3 ரஷிய நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய 2 தனிநபர்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க நிதித்துறை அறிவித்தது. இதுபற்றி அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், வட கொரியாவுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள், ஏவுகணை சோதனைகளுக்கான வெளிநாட்டு சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை வடகொரியா அணுகுவதிலிருந்து கட்டுப்படுத்தும் என தெரிவித்தார்.