வேகமாக பரவும் கொரோனா வைரஸ் இந்தியா குறித்து அமெரிக்க உளவு அமைப்பு கவலை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை அமெரிக்க புலனாய்வுத்துறை கண்காணித்து வருகிறது இந்தியா குறித்து கவலை தெரிவித்து உள்ளதாக ஆதாரங்கள் தெரிவித்து உள்ளன.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

வாஷிங்டன்

கொரோனா வைரசால் உலக அளவில் இதுவரை 2804 பேர் உயிர் இழந்துள்ளனர். கொரோனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுகான் நகரில் இருந்து வைரஸ் பரவத் தொடங்கியது.

இப்போது உலகில் 6 கண்டங்களில் 53 நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் 93, தாய்லாந்தில் 40, தைவான் 32, பஹ்ரைன் 26, குவைத், ஆஸ்திரேலியா 23, மலேசியா 22, பிரான்ஸ் 18, ஜெர்மனி 18, இந்தியா-3, பிரேசில் 1, எகிப்து 1, ஜார்ஜியா 1 உட்பட 50 நாடுகளைச் சேர்ந்த 82,169 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த வைரசின் தாக்கம் மிகக் குறைவாக உள்ளது.

கொரோனா வைரசின் உலகளாவிய பரவலையும், அதற்கு அந்த நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகளையும் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கண்காணித்து வருகின்றன. கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவினால் இந்தியா எவ்வாறு சமாளிக்கும் என்பது குறித்து கவலை அளிப்பதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருந்த போதிலும் நாட்டில் கிடைக்கக்கூடிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் இந்தியாவின் அடர்த்தியான மக்கள் தொகை காரணமாக வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தீவிரமான கவலையில் மத்திய அரசு உள்ளதாக உளவுத்துறை ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

சில வளரும் நாடுகளில் அரசாங்கங்கள் பலவீனமடைவதைப் பற்றி அமெரிக்க உளவு அமைப்புகள் கவலைப்படுவதாக மற்றொரு ஆதாரம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஈரான் நாட்டின் துணை சுகாதார அமைச்சரே நோய்வாய்ப்பட்டுள்ளதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ அமெரிக்கா "ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது" என்று கூறினார்.

உளவு நிறுவனங்களிடமிருந்து இந்த வைரஸ் குறித்த விளக்கத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் புலனாய்வுக் குழு பெற்றுள்ளது.

இந்த கட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைக் கண்காணிப்பதும் அரசாங்கங்களின் பதில்களை மதிப்பிடுவதும் அமெரிக்க உளவு அமைப்புகளின் பங்கு முக்கியம் ஆகும்.

அவர்கள் சேகரிக்கும் தகவல்களைப் பகிர்வதிலும் சேமித்து வைப்பதிலும் அமெரிக்க நோய்களுக்கான கட்டுப்பாட்டு மையம் போன்ற சுகாதார நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com