தென்சீனக்கடலில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் விபத்து

சீனக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் அடையாளம் தெரியாத பொருள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்சீனக்கடலில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பல் விபத்து
Published on

தென்சீனக்கடல் பகுதி சர்வதேச அளவில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது. இந்த கடல் பகுதியில் உள்ள பெரும்பாலான தீவுகள் தமக்கே உரியது என்று சீனா கூறி வருகிறது. ஆனால் அந்த பிராந்தியத்தில் உள்ள பிலிப்பைன்ஸ், மலேசியா, தைவான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் சீனாவின் கூற்றை மறுத்து வருகின்றன. இந்த பிரச்சினையில் சீனாவை எதிர்க்கும் அமெரிக்கா பிற நாடுகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

இந்த நிலையில் தென் சீனக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் அடையாளம் தெரியாத பொருள் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அணு ஆயுத திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான யூஎஸ்எஸ் கனெக்டிகட் நீர்மூழ்கி கப்பல் தென்சீனக்கடல் பகுதியில் நீருக்கு அடியில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் மோதியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த விபத்தில் மாலுமிகள் 11 படுகாயம் அடைந்தனர். எனினும் அவை உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை. விபத்தில் கப்பலுக்கு பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கப்பல் பாதுகாப்பான மற்றும் நிலையான நிலையில் உள்ளது என்றார்.

இந்த மோதல் எதனால் நடந்தது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை என கூறிய அதிகாரிகள் தற்போது அமெரிக்க பிராந்தியமான குவாமை நோக்கி கப்பல் பயணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com