

வாஷிங்டன்,
அமெரிக்காவில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணராக இருந்து வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி (வயது 44). ஜனாதிபதி ஜோ பைடனின் கொரோனா தடுப்பு பணிக்குழுவிலும் முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.
இதனால் விவேக் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தடுப்பூசி மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது மூலம் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கான சிறப்பான முயற்சிகளை எடுத்துவந்தனர். ஆனாலும் அவர்களை கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்த வகையில் விவேக் மூர்த்திக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த விவேக் மூர்த்தி, தனக்கு மட்டும் இன்றி தனது மனைவி, தங்களின் 5 வயது மகன் மற்றும் 4 வயது பெண் குழந்தைக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். எனினும் தங்களுக்கு லேசான அறிகுறிகளே இருப்பதாகவும், ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
விவேக் மூர்த்தி, அவரது மனைவி மற்றும் 5 வயது மகன் ஆகிய 3 பேரும் கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டனர். அதே நேரம் 4 வயது மகளுக்கு தடுப்பூசி பெறுவதற்கான தகுதி இல்லாததால் அவளுக்கு தடுப்பூசி போடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.