வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: டொனால்டு டிரம்ப்

வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். #DonaldTrump #NorthKorea
வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது: டொனால்டு டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் -டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு விரைவில் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்காவும் வடகொரியாவும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

வடகொரியாவுடன் நேரடியாக பேச துவங்கிவிட்டோம். உயர்மட்ட அளவில் இந்த நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அமெரிக்கா- வடகொரியா இடையேயான உச்சி மாநாடு நடைபெறுவதற்கான சாத்தியமான ஐந்து இடங்களை ஆலோசிக்கிறோம்.

ஆனால், அமெரிக்காவில் உள்ள இடங்கள் கிடையாது. நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன என நான் நம்புகிறேன். பல நல்ல விஷயங்கள் நடக்கிறது. எனவே, என்ன நடைபெறுகிறது என்பதை காணலாம். இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு மூலம், இந்த நிலைகளில் சில முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன். வடகொரியா விவகாரத்தில் ஆக்கப்பூர்வ பங்களிப்பு அளித்த சீன அதிபருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அணு ஆயுத சோதனைகளால் வடகொரியா அமெரிக்கா இடையில் மோதல் ஏற்பட்டது. இருநாட்டு தலைவர்களும் வார்த்தை போரில் ஈடுபட்டு வந்ததால் போர் மூளும் அளவுக்கு பதட்டம் அதிகரித்து இருந்தது. இந்த சூழலில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது.

இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சில முன்னேற்றங்களை தொடர்ந்து டொனால்டு டிரம்பை சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆர்வம் காட்டினார். இதை டொனால்டு டிரம்பும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, இரு தலைவர்கள் இடையேயான சந்திப்பு அடுத்த மாதம் (மே) நடைபெற கூடும் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com