

வாஷிங்டன்,
அமெரிக்கா சென்று உள்ள பாரத பிரதமர் நரேந்திர மோடி டொனால்டு டிரம்பை சந்திப்பதற்கு முன்னதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. காஷ்மீரில் அமைதியை சீர்குலைத்து வருகிறது.
பயங்கரவாதி சலாவுதீன் காஷ்மீரில் அமைதியை திரும்பவிடப்போவது கிடையாது என்று செப்டம்பரில் சபதமிட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகமான காஷ்மீரி தற்கொலை பயங்கரவாதிகளை உருவாக்குவேன். அவர்களை பள்ளத்தாக்கு பகுதிக்குள் அனுப்பி இந்திய படைகளை மயானத்திற்கு அனுப்புவேன். காஷ்மீருக்கு வெளியே இருந்தே சண்டையிடுவேன். போர் தவிர்த்து வேறு எதுவும் காஷ்மீர் விவகாரத்தில் தீர்வாகாது. காஷ்மீர் தலைவர்கள், மக்கள் மற்றும் முஜாகிதீன்கள் முறையான மற்றும் அமைதியான வழி கிடையாது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும். எந்தஒரு வழியும் கிடையாது, ஆயுதப்போரை தொடங்கவேண்டியதுதான் என்று கூறியிருந்தான்.
பயங்கரவாதி சையத் சலாவுதீன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் தலைநகர் முசாப்பராபாத்தில் உள்ளான். ஜீலம் மற்றும் நீலம் ஆறுகளின் கரையில் அமைந்து உள்ள முசாப்பராபாத் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவிலும், இஸ்லாமாபாத்தில் இருந்து 125 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவன். இவனும் பாகிஸ்தான் உதவியுடன் அங்கு சுதந்திரமாக சுற்றி வருகின்றான். பதன்கோட் தாக்குதலுக்கும் பொறுப்பு ஏற்றவன்.
இப்போது அவனை அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து உள்ளது. அமெரிக்கர்கள் அவனுடன் எந்தஒரு தொடர்பையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க நீதித்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சலாவுதீன் சொத்துக்கள் இருப்பின் அது முடக்கப்படும். அமெரிக்காவின் அறிவிப்பை இந்தியா வரவேற்று உள்ளது.