

வாஷிங்டன்,
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது முதல் வெளிநாட்டு பயணமாக தென் அமெரிக்க நாடான கவுதமலா செல்வதற்காக நேற்று முன்தினம் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஜே.பி.ஏ. விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.
விமானம் கிளம்பிய 30 நிமிடங்களுக்குப் பின்னர் விமானத்தில் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை அறிந்த விமானிகள் விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்பி அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர்.
அதன்படி விமானிகள் இதுகுறித்து ஜே.பி.ஏ. விமானப்படை தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துவிட்டு விமானத்தை திருப்பினர். அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் விமானத்திலிருந்து இறங்கிய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தான் மிகவும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். அதன் பின்னர் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு கமலா ஹாரிஸ் மற்றொரு விமானத்தில் கவுதமலா புறப்பட்டு சென்றார்.