அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம்

ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு மத்தியில் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு வியட்நாமுக்கு புறப்பட்டு சென்றார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம்
Published on

சிங்கப்பூர்,

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான போரில் தலீபான்கள் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசம் சென்று உள்ளது.

தலீபான்களுக்கு எதிரான இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு பெரும் பக்கபலமாக இருந்து வந்த அமெரிக்க படைகள் அங்கிருந்து வெளியேறிய பின்னரே தலீபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர்.

எனவே ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு அமெரிக்காவே காரணம் என கூறி பல நாடுகள் அமெரிக்கா மீது அதிருப்தி தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நெருக்கடிக்கு மத்தியில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், கமலா ஹாரிஸ் முதல் முறையாக ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை காலையில் அவர் சிங்கப்பூருக்கு சென்றார்.

அங்கு 3 நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்ட கமலா ஹாரிஸ் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அரசின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து அமெரிக்கா-சிங்கப்பூர் உறவை வலுப்படுத்துவது குறித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இணைய பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், பெருந்தொற்று நோய்களை எதிர்கொள்வது உள்ளிட்ட புதிய அம்சங்களில் ஒத்துழைப்பை வழங்க இருதரப்பும் ஒப்புக்கொண்டன. இதனிடையே ஆர்க்கிட் பூ வகை ஒன்றுக்கு தங்கள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கமலா ஹாரிஸ் பெயரை சூட்டியுள்ளது சிங்கப்பூர்.

இந்த நிலையில் கமலா ஹாரிஸ் தனது சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வியட்நாமுக்கு புறப்பட்டார். அங்கு அவர் அந்நாட்டு தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசுகிறார். குறிப்பாக கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கலந்துரையாடுகிறார். முன்னதாக சிங்கப்பூரில் இருந்து வியட்நாமுக்கு புறப்படுவதற்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ் தென்சீன விவகாரத்தில் சீனாவை கடுமையாக சாடினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- தென்சீன கடலில் சீனாவின் உரிமை கோரல்கள் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலின் அடிப்படையிலானது. இந்த சட்டவிரோத உரிமை கோரல்கள் 2016-ம் ஆண்டு நடுவர் மன்ற தீர்ப்பால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் தென் சீன கடல் விவகாரத்தில் சீனாவின் நடவடிக்கைகள் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை குறைமதிப்புக்கு உட்படுத்துகின்றன மற்றும் பிராந்திய நாடுகளின் இறையாண்மையை அச்சுறுத்துகின்றன. இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதன் நட்பு நாடுகளின் பக்கம் தொடர்ந்து நிற்கும்.

இவ்வாறு கமலா ஹாரிஸ் கூறினார்.

தென் சீனக்கடலில் உள்ள பல்வேறு தீவுகளை சீனா சொந்தம் கொண்டாடி வருவதும், ஆனால் அந்த தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என ஜப்பான், வியட்நாம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com