

பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளில் நேட்டோ படைகள் குவிக்கப்பட்டு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் ஐரோப்பிய நாடான நார்வேயின் வடக்கு பகுதியில் உள்ள நோர்ட்லேண்ட் நகரில் நேற்று முன்தினம் நேட்டோ படைகள் பயிற்சியில் ஈடுபட்டன.
அப்போது அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான எம்வி-22பி ஆஸ்ப்ரே ரக போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. விமானத்தில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 4 பேர் இருந்தனர்.
கிளம்பிய சிறிது நேரத்தில் போர் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதை தொடர்ந்து மாயமான அந்த விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இதில் அமெரிக்க போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதும், இந்த கோர விபத்தில் அமெரிக்க வீரர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்தது.
இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் நேட்டோ பயிற்சியின்போது நிகழ்ந்த விமான விபத்தில் அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலியாகினர். வீரர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக வீரர்களுக்கு எங்களுடடைய ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்துள்ளார்.