

வாஷிங்டன்,
அமெரிக்காவின் பிரபல தேசிய பூங்காவில் நடந்து கொண்டிருந்த முதியவரை காட்டெருமை ஒன்று முட்டித் தூக்கி வீசியது.
அமெரிக்காவின் வயோமிங் மாகாணத்தில் புகழ்பெற்ற “யெல்லோஸ்டோன்” தேசிய பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் முகாம் பகுதியில், 65 வயது முதியவர் ஒருவர் தனது பேரனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு புல்வெளியில் நின்று கொண்டிருந்த சுமார் 900 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட காட்டெருமை ஒன்று, திடீரென இவர்களை நோக்கி ஆக்ரோஷமாக பாய்ந்தது.
ஆபத்தை உணர்ந்த முதியவர் அருகில் இருந்த மரத்தின் பின்னே மறைந்து தப்பிக்க முயன்றார். எனினும், அந்த காட்டெருமை அவரை விடாமல் துரத்தி, தனது கூர்மையான கொம்புகளால் முட்டி காற்றில் 8 அடி உயரத்திற்கு தூக்கி வீசியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இனச்சேர்க்கை காலங்களில் இந்த காட்டெருமைகள் வழக்கத்தை விட அதிக ஆக்ரோஷத்துடன் காணப்படும் என பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காட்டெருமை மற்றும் மான்களிடம் இருந்து குறைந்தது 25 கெஜம் (23 மீட்டர்) தூரமும், கரடிகளிடம் இருந்து 100 கெஜம் (300 அடிகள்) தூரமும் விலகி இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.