அமெரிக்கா: மத்திய கல்வித்துறை கலைப்பு - மாகாணங்களுக்கு இனி முழு அதிகாரம்


அமெரிக்கா: மத்திய கல்வித்துறை கலைப்பு - மாகாணங்களுக்கு இனி முழு அதிகாரம்
x

Image Courtesy : @WhiteHouse

தினத்தந்தி 21 March 2025 8:55 AM IST (Updated: 21 March 2025 8:57 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க அரசின் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் பணி நீக்க நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை நிறுத்தியது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க அரசின் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் கல்வித்துறையின் முழு அதிகாரமும் இனி மாகாணங்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த உத்தரவு அமெரிக்காவின் கூட்டாட்சி கல்வித் துறையை நிரந்தரமாக நீக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 1979-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வித்துறையை, காங்கிரஸின் ஒப்புதல் இல்லாமல் கலைக்க முடியாது. ஆனால் டிரம்ப்பின் உத்தரவு, கல்வித்துறைக்கான நிதி மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

கல்வித்துறையை மூடுவதற்கும், கல்வி அதிகாரத்தை மாகாணங்களிடம் திருப்பி வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கல்வித்துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை வலியுறுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், ஜனநாயக கட்சியினரும், கல்வியாளர்களும் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் சபை உறுப்பினர் சக் ஷுமர் கூறுகையில், "இது கொடுங்கோன்மையான அதிகார பறிப்பு. இதுவரை டொனால்ட் டிரம்ப் எடுத்த மிகவும் அழிவுகரமான மற்றும் பேரழிவு தரும் நடவடிக்கைகளில் ஒன்று" என்று விமர்சித்துள்ளார்.

1 More update

Next Story