

வாஷிங்டன்,
அமெரிக்காவை தாக்கிய மைக்கேல் புயலால் பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. புளோரிடா மாகாணத்தின் வடமேற்கு கடலோர பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன.
இந்தப் புயலால் அமெரிக்காவில் 2 பேர் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4 பேர் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர். ஜார்ஜியா மற்றும் வடக்கு கரோலினா மாகாணங்களில் தலா ஒருவர் பலியாகி உள்ளனர்.
புயல் சேதம் குறித்து புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் கூறுகையில், இந்தப் புயலால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடும்பங்களின் வாழ்க்கையையே இந்தப் புயல் புரட்டிப்போட்டு விட்டது என்று குறிப்பிட்டார்.
அமெரிக்க கடலோர காவல்படை, புளோரிடாவில் 27 பேரை காப்பாற்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்பான நிலை உருவாகிற வரையில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பனாமா சிட்டியும் பெருத்த சேதங்களை சந்தித்து இருக்கிறது. அங்கு மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பல கட்டிடங்கள் உருக்குலைந்து போயின.
புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களில் மைக்கேல் புயலால் 9 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்சார வினியோகம் இல்லை.