

நியூயார்க்,
இசை உலகத்தின் பிரபலமான டோலி பார்டனின் மறைவுக்கு ‘எம்பயர் ஸ்டேட் கட்டிடம்’ தனித்துவமான முறையில் அஞ்சலி செலுத்தியது.
அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் உள்ள ப்ரெண்ட்வுட் நகர் நாஷ்வில்லே கிராமத்தை சேர்ந்தவர் டோலி பார்டன் (வயது 80). இவர் உலகப் புகழ்பெற்ற அமெரிக்க நாட்டுப்புற இசை பாடகி, பாடலாசிரியர், நடிகையாக திகழ்ந்தார். இசையுலகின் ராணி என்றும் அழைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தால் ஆகஸ்ட் 21 தேதி அன்று சிகிச்சைக்காக நாஷ்வில்லேவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டோலி பார்டனின் இறுதிச் சடங்கு அவரது வீட்டின் முன்பு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது உடல் கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் காலமான அவரது கணவர் கார்ல் டீனின் அருகிலேயே அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
டோலி பார்டன் கடைசி காலத்தில் கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால், இறக்கும் வரை அந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் மறைத்து வந்தார். அவர் புற்றுநோயுடன் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டு வந்ததை அவரது மறைவுக்கு பிறகு அவரது பிரதிநிதிகள் மற்றும் எஸ்டேட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு இசையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அவரது மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நியூயார்க்கின் புகழ்ப்பெற்ற ‘எம்பயர் ஸ்டேட் கட்டிடம்’ தனித்துவமான முறையில் நேற்று இரவு 9.25 மணி அளவில் இளஞ்சிவப்பு நிற ஒளியில் ஜொலித்து அஞ்சலி செலுத்தியது.