

லண்டன்,
இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதர்கிடையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் இங்கிலாந்து அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அந்த வகையில் இங்கிலாந்தில் வரும் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதிக்குள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளவர்கள் அனைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த இலக்கை நோக்கி துரிதமாக பயணிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வாரமும் 20 லட்சத்திற்கும் மேலான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தியாக வேண்டும். எனவே தடுப்பூசி வழங்கப்படுவதற்கான முன்னுரிமை பட்டியலை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது. அந்த பட்டியலில் நான்கு குழுக்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி முதல் குழுவில் சுகாதார மையங்களில் இருப்பவர்கள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள், 2வது குழுவில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தேசிய சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளர்கள், 3வது குழுவில் 75 வயதிற்கு மேற்பட்டவர்கள், 4வது குழுவில் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று மருத்துவ ரீதியாக நிரூபனம் ஆனவர்கள் ஆகியோர் ஆவர்.
இந்த முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கானது பிப்ரவரி மாதம் இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் ஊரடங்கு விளக்கப்படுவதற்கு முன்பாக கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள அனைவருக்கும் தடுப்பூசி சென்று சேர்ந்திருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.