

காரகாஸ்
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலைகளின் தாக்கம் பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1, பின்னர் சில நிமிடங்களில் 7.5 என்ற அளவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால், மொரோன் நகரம், தலைநகரான காரகாஸ் நகரம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பலர் காயமடைந்தனர். இதனால், நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்கா வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
வெனிசுலா பொறுப்பு ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, நிலநடுக்க தாக்கங்களின் பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். இன்று காலை வரை 32 பேர் பலியாகி உள்ளனர். 700 பேர் காயமடைந்தனர் என்றும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார்.
லா குவைரா பகுதியில் கடலில் சுனாமி அலைகள் எழுந்துள்ளன. சில பகுதிகளில் பல அடி உயரத்திற்கு சுனாமி அலை எழுந்து, கரையை நோக்கி வந்தது. அப்போது எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. கடலின் கரையையொட்டிய பகுதியை நோக்கி அலைகள் வர வர படகுகள் தத்தளித்தன. இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது.
இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பின்னர், தொடர்ந்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட வலுவான அதிர்வுகள் பதிவாகியுள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.